| யாவரும் பல்நூறு ஆயிரம் விலங்கின் தொகுதியும் மன்உயிர் அடங்கலும் வந்துஒருங்கு ஈண்டி அருந்தியோர்க்கு எல்லாம் ஆர்உயிர் மருந்தாய்ப் பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும் நீரும் நிலமும் காலமும் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளைவும் பெருகியது என்னப் பெருவளம் சுரப்ப வசித்தொழில் உதவி வளம்தந் ததுஎனப் பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லுங் காலைத் தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவண வடிகளும் மல்லல் மூதூர் மன்உயிர் முதல்வி நல்அறச் சாலை நண்ணினர் சேறலும் சென்றுஅவர் தம்மைத் திருவடி வணங்கி நன்றுஎன விரும்பி நல்அடி கழுவி ஆசனத்து ஏற்றி அறுசுவை நால்வகைப் போனகம் ஏந்திப் பொழுதினில் கொண்டபின் பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து வாய்வ தாகஎன் மனப்பாட்டு அறம்என மாயைவிட்டு இறைஞ்சினள் மணிமே கலைஎன். கச்சி மாநகர் புக்க காதை முற்றிற்று. இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி அறம்திகழ் நாவின் அறவணன் உரைப்போன் வென்வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன் தன்மகள் பீலி |