| ஈங்குஇது உள்ள வழிஉண் டாகலில் தக்க தக்க சார்பில் தோற்றம்எனச் சொற்றகப் பட்டும் இலக்கணத் தொடர்பால் கருதப் பட்டும் கண்டம்நான்கு உடைத்தாய் தோற்றற்கு ஏற்ற காலம்மூன்று உடைத்தாய்க் குற்றமும் வினையும் பயனும் விளைந்து நிலையில வறிய துன்பம்என நோக்க உலையா வீட்டிற்கு உறுதி யாகி நால்வகை வாய்மைக்குச் சார்பிடன் ஆகி ஐந்துவகைக் கந்தத்து அமைதி ஆகி மெய்வகை ஆறு வழக்குமுகம் எய்தி நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி இயன்றநால் வகையால் வினாவிடை உடைத்தாய் நின்மதி இன்றி உழ்பாடு இன்றிப் பின்போக் கல்லது பொன்றக் கெடாதாய்ப் பண்ணுநர் இன்றிப் பண்ணப் படாதாய் யானும் இன்றி என்னதும் இன்றிப் போனதும் இன்றி வந்ததும் இன்றி முடித்தலும் இன்றி முடிவும் இன்றி வினையும் பயனும் பிம் வீடும் இனையன எல்லாம் தானே ஆகிய பேதைமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றுஎன வகுத்த இயல்பு |