| மெல்இயல் தளர்இடை அறியும் தன்மையள் கொல்லோ விளையா மழலை விளைந்து மெல்இயல் முளைஎயிறு அரும்பி முத்துநிரைத் தனகொல் செங்கயல் நெடுங்கண் செவிமருங்கு ஓடி வெங்கணை நெடுவேள் வியப்புஉரைக் கும்கொல் மாதவர் உறைவிடம் ஒரீஇமணி மேகலை தானே தமியள்இங்கு எய்தியது உரைஎனப், பொதிஅறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தி மதுமலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும் இளமை நாணி முதுமை எய்தி உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ? அனையது ஆயினும் யான்ஒன்று கிளப்பல் வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி வினையின் வந்தது வினைக்குவிளைவு ஆயது |