| ஆறுஅறி மரபின் அறிந்தோர் செய்யுமின் தண்மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்உரை அறிவீர் பொருந்துமின் ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்குஅறிந்து ஏறுமின் பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும் தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும் தேவரும் மக்களும் ஒத்துஉடன் திரிதரும் நால்ஏழ் நாளினும் நன்குஅறிந் தீர்என ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும் களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பிப் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்குஎன். விழாவறை காதை முற்றிற்று. |