| என்போன் தனிவழிச் சென்றோன் என்பும் தடியும் உதிரமும் யாக்கைஎன்று அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி வழுவொடு கிடந்த புழுஊன் பிண்டத்து அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்டு உலப்புஇல் இன்பமோடு உளைக்கும் ஓதையும் கலைப்புற அல்குல் கழுகுகுடைந்து உண்டு நிலைத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும் கடகம் செறிந்த கையைத் தீநாய் உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும் சாந்தம் தோய்ந்த ஏந்துஇள வனமுலை காய்ந்தபசி எருவை கவர்ந்துஊண் ஓதையும் பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து மண்கணை முழவம் ஆக ஆங்குஓர் கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி இரும்பேர் உவகையின் எழுந்துஓர் பேய்மகள் புயலோ குழலோ கயலோ கண்ணோ |