தெய்வ மாதர் திட்பங் கூற அண்ணன் மருங்கி னாவது வேண்டும் தன்மன முவந்தது தலைவர நோக்கி ஏற்ற முன்கைத் தொடிவீழ்ந் தற்றாற் கோற்றொடி கொண்ட கொள்கையென் றேத்தி மிகுதியின் மிக்கதன் மேற்றிணைக் கேற்பத் தகுவன கூறுந் தலைமகன் மகளென உவகை நெஞ்சமொ டுவப்பன கூறிப் பைந்தொடி யாயமொடு பன்னொடி பகர்ந்து கங்குல் யாமத்துங் கண்படுத் திலையாற் கல்விச் சேவகங் கடவோன் வருந்துணைப் பல்பூங் கோதாய் பள்ளிகொண் டருளெனப் பூமென் சேக்கையுட் புனையிழைப் புகீஇ யான்வரு மாத்திரை யாரையும் விலக்கிக் காஞ்சன மாலாய் காவல் போற்றெனத் தொகுவேன் முற்றஞ் சிவிகையிற் போந்து மயிலா டிடைகழி மாடத் தொருசிறைப் பயில்பூங் கொம்பர்ப் பந்தர்மு னிழிந்து கிளரிழை கற்குங் கேள்விப் பொழுதெனத் தளரிய லாயமொடு தாய்முத லிசைப்பக் கீத சாலை வேதிகை காக்கும் கோல்கொள் சுற்றமொடு குமரன் புகுதர இடுமணன் முற்றத் திவ்வழி வருகெனக் கொடிமுதிர் குருகின் கொம்புதலைக் கொண்ட உதிர்பூம் புன்கி னொருசிறை யிரீஇ இனைத்திறம் பகருறு மெந்தையொ டென்னிடைக் கிளைத்திறம் பகருநகர் தலைப்பெய லரிதெனக் கண்ணினுஞ் செவியினு நண்ணுநர்ப் போற்றி மண்ணகங் காவலன் மாபெருந் தேவி திருவயிற் றியன்ற பெருவிறற் பொலிவே இனையை யாவது மெம்மனோர் வினையென யாக்கைய தியல்பினு மன்பினுங் கொண்டதன் காட்சிக் கண்ணீர் கரந்தகத் தடக்கி இன்ன ளென்றியா னென்முத லுரைப்பேன் மன்னவன் மகனே மனத்திற் கொள்ளெனச் செம்மற் செங்கோ னுந்தை யவையத் தென்னிகந் தொரீஇயின னிளமையிற் கணவன் தன்னிகந் தொரீஇயான் றகேஎ னாகக் கொண்டோற் பிழைத்த தண்டந் தூக்கி வடிக்க ணிட்டிகைப் பொடித்துக ளட்டிக் குற்றங் கொல்லுமெங் கோப்பிழைப் பிலனென முற்றந் தோறு மூதூ ரறிய நெய்தற் புலைய னெறியிற் சாற்றிப் பைதற் பம்பை யிடங்க ணெருக்கி மணற்குடம் பூட்டி மாநீர்

|