பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   45
Zoom In NormalZoom Out


 

தேறிப்
பிடியும் வையமும் வடிவமை பிடிகையும்
பெருந்தே னொழுக்கிற் பிணங்கிய செலவின்
வண்ண மகளிர் சுண்ணமொடு சொரியும்
மலர்தூ மாட மயங்கிய மறுகின்
நாட்பெரு வாயி னாறுநீ ராத்திரை
வாட்கெழு நெடுந்தகை வளம்பட வெழலும்
உயவக் கொண்ட வோவியத் தண்டிகை
இயைகொள் வெள்ளியா டிரும்பியாப் புறுத்து
வான்கொடிப் பவழமொடு வல்லோர் வகுத்த
ஆன்கட் சந்தனத் தரிக்கவறு பரப்பி
முத்து மணியுஞ் சித்திரத் தியற்றிப்
பத்தி பயின்ற கட்டகக் கம்மத்து
மருப்பிடைப் பயின்ற மாசறு மணித்தொழிற்
பரப்பமை பலகையொடு பாசுணங் கோலி
ஐவகை வண்ணமு மாகரித் தூட்டிக்
கைவினை நுனித்த கச்சணி கஞ்சிகை
பசும்பொன் குயின்ற பத்திப் போர்வை
அசும்பிற் றேயா வலர்கதி ராழி
பாடின் படுமணி யூடுறுத் திரங்க
மாலை யணிந்த மணித்தொழிற் பாண்டியம்
நூல்பிணித் தின்னுக நோன்சுவற் கொளீஇக்
கோல்கொள் கன்னியர் மேல்கொண் டேறி
விசிபிணி யுறுத்த வெண்கோட் டூர்தி
முரசெறி முற்றத்து முந்துவந் தேறும்
அரச மங்கைய ரடிமிசைக் கொண்ட
கிண்கிணி மயங்கிய தண்பெருங் கோயிற்
கடைப்பகச் செப்பே கவரி குஞ்சம்
அடைப்பைச் சுற்றமொ டன்னவை பிறவும்
அணிகலப் பேழையு மாடை வட்டியும்
மணிசெய் வள்ளமு மதுமகிழ் குடமும்
பூப்பெய் செப்பும் புகையகி லறையும்
சீப்பிடு சிக்கமுஞ் செம்பொற் கலசமும்
காப்பியக் கோசமுங் கட்டிலும் பள்ளியும்
சுட்டிக் கலனுஞ் சுண்ணகக் குற்றியும்
வட்டிகைப் பலகையும் வருமுலைக் கச்சும்
முட்டிணை வட்டு முகக்கண் ணாடியும்