இப்பதினோ ரீறுகளும் வினைக்கண் வரும்பொழுது
பால் விளக்கும் எனல்

10.இருதிணை மருங்கின் ஐம்பா லறிய
ஈற்றுநின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும்
தோற்றந் தாமே வினையொடு வருமே.

மேல், பாலுணர்த்தப்பட்ட எழுத்திற்கெல்லாம் உரியதோர்
இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இரண்டு திணைக்கண்ணும் ஐந்துபாலும் விளங்க இறுதிக்கண் நின்று ஒலிக்கும் பதினோரெழுத்தும் தாந்தோற்றமாக வினையோடு வரும், எ-று.

தோற்றமாக என்பது பெரிதாக என்பது குறித்து நின்றது. எனவே, பெயரொடு வருகை சிறுவரவிற்று என்று கொள்ளப்படும். ஆடூஉ, மகடூஉ, மக்கள், மரம், அவை எனப் பெயர்க்கட் பிறவாற்றானும் வரும் ஆதலின். உதாரணம் மேற்காட்டப்பட்டன.

(10)