இதுவு மது

101.பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும்
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப.

இது பல உருபுந் தொடர்ந் தடுக்கியவழி வரும் வேறுபாடும்,
உருபு தொகுமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இறுதியும் இடையும் நின்ற எல்லா உருபும் முடிக்கும்வினை ஒன்றனோடு முடிதலேயன்றி, வேறு வேறு வினையேற்று ஒரு வினையோடு முடிதலும், அவ்வுருபுகள் தொக்குநின்று முடிக்குஞ் சொல்லோடு முடிதலும் நெறிபட வழங்கிய நெறிப் பக்கத்தன என்று சொல்லுவர், எ - று.

இறுதியும் இடையும் என்பது மேலைச் சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப்பட்டது. நெறிபட வழங்கிய பக்கம் என்றமையான் ஏற்கும் வினையே கொள்ளப்படும்.

பிறிது பிறிதேற்றல் கூறல் வேண்டா; வேற்றுமை உருபு வினையோடு முடியும் என்பதனாற் பெறுதுமெனின், மேல் நின்ற அதிகாரம் பல உருபடுக்கியவழி ஒருவினையான் முடியும் என்றமையால், தனித்தனி வினைகொண்டு முடியவும் பெறுமோ என நின்ற ஐயம் தீர்த்தற்குக் கூறல் வேண்டுமென்க.

ஈண்டு உருபு தொகுதல் கூறிய தென்னை? வேற்றுமைத் தொகை என எச்சவியலுட் கூறுகின்றாராதலின் எனின், தொகைச் சொல்லாவது

இறுதிப் பெயரோடு தொக்கு ஒரு சொன்னீர்மைப் பட்டு நிற்பது; இஃதன்ன தன்றித் தொகாநிலைத் தொடர்ச்சிக்கண் உருபு மாத்திரம் தொக்கு நிற்கும் என்று கொள்க.

எ - டு.காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி
மாதரிக்குக் காட்டி மனையி னகன்றுபோய்க்
கோதி லிறைவனது கூடற்கட் கோவலன்சென்
றேத முறுதல் வினை.

இதனுள், பல உருபு பலவினையான் வந்தன; ஒருவினையான் முற்றுப் பெற்றன.

உருபுதொக வருமாறு;--நிலத்தைக் கடந்தான்; வாளால் வெட்டினான்; கொலைக்கு உடம்பட்டான்; வரையினின்றும் பாய்ந்தான்; சாத்தனது பொத்தகம்; மாடத்துக்கண் இருந்தான் என்பன, நிலம் கடந்தான்; வாள் வெட்டினான்; கொலை யுடம்பட்டான்; வரைபாய்ந்தான்; சாத்தன் பொத்தகம்; மாடத்திருந்தான் என உருபு தொக்கவழியும் ஒட்டுப்படாது நின்று, தொகாநிலைத் தொடர்ச்சியாகிப் பொருள் பட்டவாறு கண்டுகொள்க.

தொகைச் சொல்லும், உருபு தொகைச் சொல்லும் வேறுபாடிலவாயினு மோசை வேற்றுமையான் வேறுபாடறிந்து கொள்க.

பிறிது பிறிதேற்றல் என்பதனை ஆறனுருபு ஏனையுருபேற்கும் எனப் பொருளுரைத்துச்1 சாத்தனதனை, சாத்தனதனொடு என உதாரணங்காட்டுபவாலெனின், அவ்வாறு வரும் அது என்பது உருபுநிலை யொழிந்து பொருளாய் நிற்றலானும், சாத்தனதனைக் கொணர்ந்தான் என்றவழி இடைநின்ற அது என்பது உருபாயிற் சாத்தனைக் கொணர்ந்தான் என்னும் பொருள் படல்வேண்டும்; அவ்வாறு பொருள்படாது உடைப்பொருளையே காட்டுதலானும்; அஃறிணை யொருமை அது என்னும் பெயர்த்தாதலானும், சாத்தன் பொத்தகத்தைக் கொணர்ந்தான் என்றாற்போல்வதல்லது, உருபு பெற்றதென்றல் அமையா தென்க.

(20)


1. இளம்பூரணர் முதலியோர் உரை.