வேற்றுமை யுருபே யன்றிப் பிறவும் மயங்கு மெனல்

103.1யாத னுருபிற் கூறிற் றாயினும்
பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.

வேற்றுமை உருபு தம்முள் மயங்குதலின்றிப் பிற உருபொடு
மயங்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். யாதொன்றன் உருபிற் கூறினும் பொருள் செல்லும் வழி வேற்றுமையும் செல்லும், எ - று.

யாதனுருபு என்பது வேற்றுமை யல்லாத உருபு. உருபு எனினும் வடிவு எனினும் ஒக்கும். 2அம்மூ வுருபின தோன்றலாறே என வடிவிற்குப் பெயராகிப் பிறாண்டும் வந்தது.

‘வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று’

(குறள் 11)

எனவும். மருந்துண்டு நோய்தீர்ந்தது எனவும் வருவுழி, உலகம் வழங்கி வருதற்கு மழை ஏதுவாகலானும், நோய் தீர்தற்கு மருந்து ஏதுவாகலானும் இவற்றிற்குப் பொருளுரைக்குங்கால் மழை நிலைநிற்றலான் உலக நடை தப்பாது எனவும், மருந்துண்டலால் நோய் தீர்ந்தது எனவும் உரைக்கவேண்டுதலின், இவை வேற்றுமை உருபான் வந்திலவாயினும், பொருண்மை முகத்தான் வேற்றுமை யாதலின், இவை இவ்வாறும் வரப்பெறும் என்று வழுவமைத்த வாறாம்.

(22)


1. நன்னூலில் இந்நூற்பா அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது(நன்-பெயரியல்-60)

2. சொல், பெயர். 6.