ஓருருபு பலபொருட்கண் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்.இதனது இது இற்று என்பது முதலாகச் சொல்லப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் நான்காம் உருபில் பண்டையோர் வழக்காகிய மரபின வாகித் தோன்றுதல் நெறி, எ - று.
‘இதனது இது இற்று’ என்பது ‘யானையது கோடு வெள்ளிது’ என்பது ‘யானைக்குக் கோடு வெள்ளிது’ எனவரும்.
‘அதனைக் கொள்ளும் பொருள் வயினானும்’ என்பது ஒன்றைக் கொள்ளும் பொருட்கண்ணும் வரும், எ - று. ஆன் இடைச்சொல், காணத்தாற் கொண்ட அரிசியென்பது ‘காணத்திற்குக் கொண்ட அரிசி’ என வரும்.
‘அதனாற் செயப்படற் கொத்த கிளவி’ என்பது அவனாற் செயப்படும் என்னும் பொருண்மைக்குப் பொருந்திய சொல் எ - று. ‘அவனான் முடியும்’ என்பது ‘அவற்கு முடியும்’ என வரும்.
‘முறைக்கொண்டெழுந்த பெயர்ச்சொற் கிளவி’ என்பது முறையைக் கொண்டெழுந்த பெயர்ச்சொற் பொருண்மை எ - று. ‘ஆவினது கன்று’ என்பது ‘ஆவிற்குக் கன்று’ என வரும்.
‘பால்வரை கிளவி’ என்பது இடம் வரைந்த சொல் என்றவாறு. கருவூரின் கிழக்கு என்பது கருவூர்க்குக் கிழக்கு என வரும்.
‘பண்பின் ஆக்கம்’ என்பது பண்பினான் ஆகுஞ் சொல் என்றவாறு. ‘இதனின் நெடிது’ என்பது ‘இதற்கு நெடிது’ என வரும்.
‘காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவி’ என்பது காலத்தான் உணருஞ் சொல் என்றவாறு. ‘காலைக்கண் வரும்’ என்பது ‘காலைக்கு வரும்’ என வரும்.
‘பற்றுவிடு கிளவி’ என்பது ‘இதனிற் பற்றுவிடும்’ என்னும் ஏதுப் பொருண்மைக்கண் ‘இதற்குப் பற்றுவிடும்’ என வரும்.
‘தீர்ந்து மொழி கிளவி’ என்பது ‘மருந்தில் தீர்ந்தது’ என்பது மருந்திற்குத் தீர்ந்தது என வரும்.
‘அன்ன பிறவும்’ என்றதனால் 1கிளையறி நாணற் கிழங்கு மணற்கீன்ற என ஏழாவதன் இடப்பொருண்மைக்கண் நான்காவது வந்தது. பிறவும் இந்நிகரனவெல்லாம் வந்தவழி அனுமித்துக்கொள்க.
(26)
1. அகம். 221.