நான்காவது ஒழிந்த ஏனைய உருபுகளும் பிறபொருளில் மயங்கல்

108.

ஏனை யுருபும் அன்ன மரபின
மான மிலவே சொன்முறை யான.

நான்காவது ஒழிந்த உருபுகள் ஏனை உருபிற்கு உரிய
பொருளொடு மயங்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். நான்காவது ஒழிந்த உருபுகளும் ஏனைப் பொருளோடு மயங்கும் மரபினை யுடைய; அவை சொல்லிலக்கணத்தாற் குற்றமில. எ - று.

எ - டு.

“கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினிர் என்று”.

(குறள். 1313)

இதனுள் ஒருத்திக்கு எனற்பாலது ஒருத்தியை யென இரண்டாவதனோடும் மயங்கி வந்தது.1“அறல்சா அய் பொழுதோடெம் அணிநுதல் வேறாகி” என்றவழிப் பொழுதின்கண் எனற்பாலது பொழுதோடென முன்றாவதனோடு மயங்கிற்று. பிறவும் அன்ன.

(27)


1. கலி. பாலை. 26.