பாலறி சொற்கள் தம்முள் மயங்காவெனல்

11.வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்
பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்
மயங்கல் கூடா தம்மர பினவே.

வழுப்படாமற் கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இவ்வோத்தினுட் செப்பும் வினாவும் வழுவாமற் கூறுதல் பயனாதலின், அவை வழுவாமற் கூறுங்கால் வினையிற்றோன்றும் பாலறிசொல்லும், பெயரிற் றோன்றும் பாலறி சொல்லும் தம்முள் மயங்குதல் பொருந்தா; தத்தம் மரபினையுடைய வாதலான், எ-று. ஆதலால் என்பது எஞ்சிநின்றது.

பெயர் என்றதனால் தன் பொருண்மையாகிய திணை பெறுதும். பாலறிசொல் என்றதனாற் பால் பெறுதும், வினையென்றதனால் அதற்கு இன்றியமையாத காலமும் இடனும் பெறுதும் தம்மரபின என்றதனால் மரபு பெறுதும், மயங்கல் கூடா என்பதனால் வழூஉப்படுதல் குற்றமென்பது பெறுதும்.

திரிபின்றிப் பால் உணர்த்துவது வினையாதலிற் சிறப்பு நோக்கி முற்கூறினார். அன்றியும் மேனின்ற சூத்திரம் வினையதிகாரப்பட்டு வருதலின் அதனோடு சேரவைத்தார் எனினும் அமையும்.

எ - டு. அவன் நெருநல் உண்டான் என்பது. இதனுள் அவன் என்னும் உயர்திணைப்பெயர் உயர்திணைவினை கொண்டு முடிதலின், திணை வழுவாதாயிற்று. ஆடூஉப்பெயர் ஆடூஉவினை கொண்டு முடிதலிற் பால் வழுவாதாயிற்று. படர்க்கைப் பெயரோடு படர்க்கைவினை முடிதலின் இடம் வழுவாதாயிற்று. நெருநலென்னும் இறந்தகாலப் பெயரோடு இறந்தகால வினை முடிதலின் காலம் வழுவாதாயிற்று. உண்டற்றொழிற்கு உரியானை உண்டான் என்றமையான் மரபு வழுவாதாயிற்று. பிறவுமன்ன.

இனி, வழுவாமாறு :--உயர்திணை மூன்று பாலும் அஃறிணை யிரண்டு பாலொடு மயங்குதல் திணைவழுவாம். அவை தம்முள்தாம் மயங்குதல் பால் வழுவாம். தன்மை, முன்னிலை, படர்க்கையென்னும் மூன்றிடமும் ஒன்றோ டொன்று மயங்குதல் இட வழுவாம், இறந்தகாலம் நிகழ்காலம், எதிர்

காலம் என்னும் மூன்று காலமும் தம்முள்மயங்குதல் காலவழுவாம். எல்லாப் பொருளையும் பயின்ற மரபினாற் கூறாதது மரபு வழுவாம்.

எ - டு. அவன் உண்டது; திணைவழூஉ. அவன் உண்டனள்: பால்வழூஉ. நீ யுண்டனன்: இடவழூஉ. நாளை உண்டேன்: காலவழூஉ. அவன் மேய்ந்தான்: மரபு வழூஉ. பிறவுமன்ன. திணைவழூஉப் பன்னிரண்டு. பால்வழூஉ எட்டு. இடவழூஉ ஆறு. காலவழூஉ ஆறு. மரபுவழூஉ வரம்பில.

(11)