மேலதற்கு ஓர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற் சொல்லப்பட்ட எண்வகைப் பொருளினும் வழங்கிய நெறிக்கண் குறைவன குறையும், எ - று. தொழில் கண்டுழி யெல்லாம் இவை எட்டும் வருதல் நியமமின்று, எ - று.
எ - டு. ஆடையை நெய்தான் றனக்கு என்றவழிக் கொள்வான் பிறன் ஒருவன் இன்மையின், அப் பொருண்மை குறைந்து நின்றது. உலகினைப் படைத்தான் என்றவழிக் கொள்வானும், பயனும் இன்றி வந்தது. கொடி ஆடிற்று என்றவழிக் கருத்தாவும், கொள்வானும் பயனும் இன்றி வந்தது. பிறவும் அன்ன.
(29)