இதுவும் ஒருவாற்றான் ஆகுபெயர்க்கு உரியதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று. விரிந்தது தொகுத்தலை
நுதலிற்று எனினும் அமையும்.
இ - ள். மேற் சொல்லப்பட்ட ஆகுபெயர்தாம், தத்தம்பொருள்வயிற் சிவணலும், தம்மொடு சிவணலும், பொருத்தமில்லாத நெறிக்கண் சுட்டலும், பிறிதின்கிழமைப் பொருளைச் சுட்டலும் ஆகிய அவ்வியல்பினையுடைய; அவ்வாறு சொல்லுங்காலத்து வேற்றுமைப் பொருட்கண் பாதுகாத்தல் வேண்டும். எ - று.
சிவணல் என்பதனை இரண்டிடத்துங் கூட்டுக. சுட்டல் என்பதனையும் இரண்டிடத்துங் கூட்டுக. ‘தத்தம் பொருள் வயிற் சிவணல்’ என்பது முதற்பொருள் சினைப்பொருளைச் சிவணுதல். அவை கடு, பொன் என்பன. ‘தம்மோடு சிவணல்’ ஆவது சினைப்பொருள் முதற்பொருளைச் சிவணுதல், அவை பூ, நீலம், சோறு, துடியிடை. தாழ்குழல் என்பன. ஒப்பில் வழிக்கண் சுட்டியது வேளார்காணி. ‘பிறிது பொருள் சுட்டியது’ சாலியன். வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் என்பது-ஆகு பெயர் என்பது வேண்டியவாறு சொல்லப்படாது; வேற்றுமைப் பொருட்கண்ணே வரப்பெறுவது என்றவாறு.
அவை அப்பொருட்கண் வந்தவாறு-முதலிற் கூறும் சினையறி கிளவியும். சினையிற் கூறும் முதலறி கிளவியும். பண்புகொள் பெயரும், இருபெயர் ஒட்டும் ஆறாம்வேற்றுமைப் பொருண் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருண் மயக்கம். இயன்றது மொழிதலும் வினைமுதல் உரைக்கும் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப் பொருண்மயக்கம்.
(31)
1. இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் இவ்வடியைத் தனி நூற்பாவாகக் கொள்வர்.