உயர்திணையில் விளியேற்கும் ஈறுகள்

117.

1அவற்றுள்,
இ உ ஐ ஓ வென்னும் இறுதி
யப்பால் நான்கே உயர்திணை மருங்கின்
மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே.

உயர்திணைப் பெயருள் உயிரீறாகி விளியேற்கும் பெயரை
வகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உயர்திணை இடத்துள்ள பொருளைச் சுட்டிய விளியேற்கும் பெயர் இ, உ, ஐ, ஓ என்னும் ஈற்றினை யுடைய அக் கூற்று நான்கு, எ - று.

உயர்திணை மருங்கினுள்ள பொருள் சுட்டிய என்றமையான் உயர்திணைப் பெயரென வகுத்தோதப் படுவனவும், விரவுப் பெயருள் உயர்திணை குறித்தனவும் கொள்ளப்படும்.

(3)


1. ‘அவைதாம்’ என்ற தனிச் சொல்லுடன் ஏனையுரைகளில் உள்ளது.