ஐயம் அறுத்தலை நுதலிற்று.
இ - ள். மேல், உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும் (சூ. 4) என்று ஓதப்பட்ட பேடி யென்னும் பெயர்க்கண் நிற்கும் சொல் ஆண்மையறிசொற்கு ஆகும் இடன் இலது, எ - று. எனவே பெண்மையறிசொற்கு ஆகும் என்றவாறாம்.
எ - டு. பெண்ணவா யாணிழந்த பேடி யணியாளோ--கண்ணவாத் தக்க கலம் (நாலடி, 251) எனவரும்.
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி பெண்மை யறிசொற்கு ஆகும் என்னாது, ஆண்மை யறிசொற்கு ஆகுமிடமின்று என எதிர்மறை வாய்பாட்டாற் கூறினமையாற் சிறுபான்மை ஆடூஉ வறிசொல்லால் வருவன உளவேற்கொள்க.
இச்சூத்திரம் பெண்மை சுட்டிய என்னுஞ் சூத்திரத்தின் (சூ. 4) பின் வையாது ஈண்டுக் கூறியது என்னை யெனின், பெயரும் வினையும் மயங்காமற் கூறுக என்றாராகலிற் பேடி யென்பது இவ்வாறு சொல்லத் தகும் என இறந்தது காத்து ஈண்டு ஓதப்பட்டது.
(12)