அண்மை விளி இயல்பாதல்

123.அண்மைச் சொல்லே யியற்கை யாகும்.

இருதிணைக்கண்ணும் வரும் எல்லாவீற்றுப் பெயரும் அண்மைக்
கண் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இச்சூத்திரம் முன்னும் பின்னும் நோக்கி நிற்றலிற் சிங்க நோக்காகிக் கிடந்ததென்று கொள்க.

இ - ள். மேற் சொல்லப்பட்ட உயிரீற்றுப் பெயரும், இனி யோதுகின்ற புள்ளியீற்றுப் பெயரும் அஃறிணைப் பெயரும் அண்மைக்கண் இயல்பாகி விளியேற்கும். னகர ஈறு சிறப்பு விதி பெறுதலின், அஃதொழிந்த ஏனைய கொள்ளப்படும், எ - று.

எ - டு. நம்பிவாழி; நங்கைவாழி; வேந்துவாழி; கோவாழி; மாதர் கூறு; அண்ணல் கூறு; கடவுள்வாழி; தும்பி கூறு; அன்னங் கூறு; கானல் கூறு எனவரும். பிறவும் அன்ன. ஆவுமானியற் பார்ப்பனமாக்களும் என்பதும் அண்மை விளி. பிறவும் அன்ன.

(9)