இதுவும் வழுப்படாமற் கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். செப்பினையும் வினாவினையும் வழுவாமற் கூறுக, எ-று.
உலகத்துப் பொருளுணர்த்துஞ் சொல்லெல்லாம் வினாவுஞ் செப்பும் ஆகிய பொருண்மேல் நிகழ்தலின், அவை வழுவாமற் கூறல்வேண்டும் என்றவாறாயிற்று.
எனவே வழு எழுவகையாம் என்பது பெற்றாம். செப்பு வருமாறு:-- அச்செப்பு நான்கு வகைப்படும்: துணிந்து கூறல், கூறிட்டுமொழிதல், வினாவிவிடுத்தல், வாய் வாளாதிருத்தல் என. துணிந்துகூறலாவது, தோன்றியது கெடுமோ என்றவழி, கெடும் என்றல். கூறிட்டு மொழிதலாவது:--செத்தவன் பிறப்பானோ என்றவழி, பற்றறத் துறந்தானோ, பிறனோ என்றல், வினாவிவிடுத்தல் என்பது.--முட்டை மூத்ததோ பனை மூத்ததோ என்றவழி, எம்முட்டைக்கு எப்பனை என்றல், வாய்வாளாமையாவது:--ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை. (மணி - 30: 235 - 249)
இனி, அவற்றுள் வினா வழுவாவது வினாவியசொல்லாற் பயனின்றி நிற்பது. அஃது ஒருவிரல் காட்டி நெடிதோ குறிதோ என்றலும், ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றலும்.
செப்பு வழுவாவது:--துணிந்து கூறும்வழித் தோன்றியது கெடுமோ என்றார்க்குக் கெடாதென்றலும், ஒலி செவிக்குப் புலனன்று என்றலும், என் தாய் மலடி என்றலும், பிறவும் இந்நிகரனவும். இனிக் கூறிட்டு மொழியவேண்டும் வழியும், வினாவி விடுக்க வேண்டும்வழியும், வாளா திருக்கவேண்டும் வழியும் துணிந்துகூறின் வழுவாம். (வினாவின்றியும் வருதலிற் செப்பு முற்கூறப்பட்டது. அது யான் குமரியாடிப் போந்தேன், ஒரு படி சோறு தம்மின் எனவரும் (இ.ஏ.)
(13)