ஆன்ஈற்றுப் பண்புப் பெயர் விளி ஏற்குமாறு

130.பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.

ஆனீற்றுப் பெயருள் பண்புப் பெயர்க்கு உரியதோர் இயல்பு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பண்பினால் பெற்ற ஆன் ஈற்றுப் பெயரும் ஆய் என விளி ஏற்கும், எ - று.

எ - டு. கரியான், கொடியான் என்பன கரியாய், கொடியாய் என வரும். கரியான் எனவும் விளியேற்குமாலெனின், அவ்வாறு வருவது பண்பு குறியாது அப்பொருட்கு இடுகுறியாகி வந்தது என்க.

(16)