அஃறிணைக்கு உரிய பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். புள்ளியும் உயிருமாகிய எழுத்தினை ஈறாக வுடைய அஃறிணைப் பெயராகி வருவனவெல்லாம் விளிஏற்கும் காலந் தோன்றின், ஏகாரம் வருதல் தெளிநிலை யுடைய, எ - று. எனவே, பிறவாற்றான் வருவன இத்துணை விளக்கம் இல என்றவாறாம். என்பது என் சொன்னவாறோ எனின், அஃறிணைப் பெயர் ஏகாரம் பெற்று விளி ஏற்றல் பெரும்பான்மை: உயர்திணைக்கு ஓதிய வாய்பாட்டால் வருதல் சிறுபான்மை என்றவாறு. காலந் தோன்றின் என்றது அஃறிணைப் பெயர் உயர்திணை போல விளி ஏற்பன சில என்பதூஉம், ஏலாதனவும் ஒருகாலம் பற்றி விளிக்கப்படும் என்பதூஉம் அறிவித்தற்கு எனக் கொள்க. எ - டு. புலியே, வண்டே, மரையே, மானே, மாவே, குயிலே, மரமே எனவரும். தும்பி, தும்பீ எனவும்; யானை, யானாய் எனவும்; வேங்கை, வேங்காய் எனவும்; தென்றல், தென்றால் எனவும்; அரிமான், அரிமானே எனவும் உயர்திணை வகையான் வருவன சிறுபான்மை. (33)
|