விளி ஏற்கும் பெயர்கள் சேய்மையில் அளபிறந்தொலித்தல்

148.

உளவெனப் பட்ட எல்லாப் பெயரும்
1அளவிறந் தனவே விளிக்குங் காலைச்
சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான.

இருதிணைக்கண்ணும் வரும் விளிவேற்றுமைக் கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இருதிணைக்கண்ணும் விளி ஏற்றற்கு உள எனப்பட்ட எல்லாப் பெயரும் ஓதிய அளவினானன்றி மாத்திரை நீண்டு ஒலிக்கும்: சேய்மைக்கண் நின்ற பொருளை விளிக்கும் வழக்கின்கண், எ - று.

எனவே, மேற் சொல்லப்பட்டவற்றுள் நெட்டெழுத்துப் பெற்றன விளிநிலைப் பொருட்கண் என்று கொள்ளப்படும். அளவிறந்தன என்றமையான் மூன்று மாத்திரையின் நீண்டு ஒலித்தலும் கொள்க. 

(34)

எ - டு. சாத்தா அ, கொற்றா அ எனவும்; சாத்தா அஅ, கொற்றா அஅ எனவும் வரும்.


1. அளபிறந்தனவே என்பது பிற வுரையாசிரியர்கள் கொண்ட பாடம்.