5. பெயரியல்

நால் வகைச் சொற்கும் பொது விலக்கணம்

151.எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், பெயரியல் என்னும் பெயர்த்து. இது பெயரியல்பு உணர்த்தினமையாற் பெற்ற பெயர்.

கிளவியாக்க முதலாக விளிமரபு ஈறாகத் தொடர் மொழி இலக்கணங் கூறி. இனி, அத்தொடர் மொழிக்கு உறுப்பாகிய தனிமொழி இலக்கணம் கூறுகின்றார். அத் தனிமொழி நான்கினும் பெயர்ச்சொல் சிறந்ததாகலின், இவ்வோத்து முற்கூறப்பட்டது. மேலதனோடு இயைபுமிது.

இதனுள் இம் முதற்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், எல்லாச்
சொற்கும் உரியதோர் பொது இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உலகத்தாரான் வழங்கப்பட்ட எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன, எ - று.

எனவே, பொருளின்றி வழங்குஞ் சொல் இல என்றவாறாம், என்னை, முயற்கோடு எனச் சொல் நிகழுமன்றே, அதனாற் குறிக்கப்பட்ட பொருள் யாங்கது? எனின், அறியாது கடாவினாய், முயல் என்பதற்குப் பொருண்மை காண்டி, கோடு என்பதற்குப் பொருண்மை காண்டி, இவை இரண்டு பொருளும் தனித்தனி உளவாதலின், இவை தனி மொழிக்கண் பொருள் குறித்து நின்றன; தொடர் மொழியாயுழி, உள்ள பொருளோடு அதன்கண் இல்லாத பொருளை அடுத்தமையான் ஆண்டு இன்றாயிற்று அல்லது, இல்பொருள்மேல் வழக்கின்று என்று கொள்க.

அஃதேல், எல்லாச் சொல்லும் பொருள் குறித்து வருமாயின், அசை நிலை, இசைநிறை, ஒரு சொல்லடுக்கு என்பன பொருள் குறித்திலவா லெனின், பொருள் உணர்த்தும் என்னாது குறித்தன என்றமையான், அவையும் சார்ந்த பொருளைக் குறித்தன என்று கொள்க. அன்றியும் எடுத்தோத்துப் பெரும்பான்மை பற்றி என்றும் கொள்க. ‘இவ்வூரார் எல்லாம் கல்வி உடையர்’ என்றவழிக், கல்லாதாரும் சிலர் உளராயினும் கற்றார் பலர் என்பது குறித்து நின்றாற் போலக் கொள்க.

இன்னும், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன” என்பதற்குப் பொருள், எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும் எ - று. எனவே, இச்சொல் இப்பொருள் உணர்த்தும் என்னும் உரிமை இல என்றவாறாம். என்னை உரிமை இலவாகியவாறு எனின், உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் பாடைதோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது, இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மை உணர்த்தும் என எல்லாப் பாடைக்கும் ஒப்பமுடிந்ததோர் இலக்கணம் இன்மையான் என்க. எனவே பொருள்பற்றிவரும் பெயரெல்லா மிடுகுறி யென்பது பெறப்பட்டது.

இவ் விடுகுறியான் அடிப்பட்ட சொல்லோடு ஒட்டி மற்றொரு பொருட்குப் பெயராகி வருவது காரணக் குறியாம்.

(1)