சொல் தன்னையும் பொருளையும் உணர்த்தல்

152.பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லி னாகும் என்மனார் புலவர்.

இதுவும் சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். சொல்லினாற் குறிக்கப்பட்ட பொருளின் தன்மை ஆராய்தலும், சொல்லின் தன்மை ஆராய்தலும் சொல் தன்னானே ஆகும், எ - று.

எ - டு. நிலம் என்பது பொருளின் தன்மை ஆராய்வார்க்கு மண்ணினான் இயன்றதோர் பூதம் என்றாயிற்று. சொல்லின் தன்மை ஆராய்வார்க்குப் பெயர்ச்சொல் என்றாயிற்று. அதனான் இருபகுதிய சொல் நிலைமை என்றவாறு.

(2)