மேற்சொல்லப்பட்ட இரு பகுதியினுட் பொருண்மை நிலை
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். பொருண்மை நிலையானது இச் சொற்குப் பொருள் இதுவென உணரப் பலபொருளிலும் தெரிந்து வேறாகி நிற்றலும், சொற்படு பொருளன்றிச் சொல்லுவான் குறிப்பினாற் பிறிது பொருள்பட நிற்றலும் என இருபகுதியை உடைத்து என்று சொல்லுவர், எ - று.
வெளிப்படுநிலை, குறிப்புநிலை எனச் சொற்பொருள் உணர்த்துமாறு இருவகை என்றமையால், இதுவும் சொல் ஆராய்ச்சியாம். அஃது எற்றாற் பெறுதும் எனின், யாதானும் ஒரு சொல்லையும் பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொல் எனக் குறியிடுங்கால், அதன் பொருண்மை உணர்த்த வேண்டுதலின் பொருண்மை நிலையும் சொல் இலக்கணம் என்பது உய்த்துணர வைத்தார்.
‘தெரிபு வேறு நின்றன’ நிலம், நீர், தீ, வளி எனப் பொருள் உணர்த்துவனவும்; உண்டான், தின்றான் எனத் தொழில் உணர்த்துவனவும். குறிப்பிற் றோன்றின--இவன் நெருப்பு, இவன் பசு எனக் குணம் பற்றியும், தீமை செய்தாரை நன்மை செய்தீர் எனவும்; கொடுமை செய்தாரை வாழ்வீராக எனவும் அப்பொருள் பயவாது பிற பொருள் பயப்ப வருவன.
(3)