இதுவுமது

155.

இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்
அவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப.

இதுவும் அது

இ - ள். இடைச் சொல்லாகக் கிளக்கப் படுவனவும், உரிச் சொல்லாகக் கிளக்கப் படுவனவும் பெயர் வினைகளைச் சார்ந்த இடத்திற் றோன்றும், எ - று.

எனவே, பெயரையும் வினையையும் சாராத வழிக் கூற்று நிகழாது என்றவாறாம். இத்துணையும் சொல்லப்பட்டது சொல்லாயிற் பொருள் குறித்து வரும் எனவும்: அது பொருண்மைநிலை, சொன்மைநிலை என இருவகைப்படும் எனவும்; அவற்றுள் பொருண்மைநிலை வெளிப்படுநிலை, குறிப்புநிலை என இருவகைப்படும் எனவும்; சொன்மைநிலை பெயர், வினை எனச் சிறப்புடைச் சொல் இரண்டும், இடை, உரி எனச் சிறப்பில் சொல் இரண்டும் என நால்வகைப்படும் எனவும்; தனி மொழிக்குப் பொது இலக்கணம் கூறியவாறாம்.

இவற்றுள், பொருண்மைநிலை வழக்கினும், சான்றோர் செய்யுளகத்தும் பயின்று வருதலானும், இவ்வழக்குத் தமிழ்நாட்டுப் பிறந்து தமிழறிவாரை நோக்குதலினானும், இலக்கணம் இன்றியும் பாகம் உணர்வார் ஆகலானும் எடுத்து ஓதாராயினார். அஃது அற்றாதல் 1வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொன் மேன என ஓதிய அதனானுங் கொள்க.

சொன்மை நிலை இலக்கணமில்வழி உணர்வரிது ஆதலான் எடுத்து ஓதப்பட்டது. 

(5)


1. உரி . 2.