பெயர்ச் சொற்கள் பாலுணர்த்துமாறு

157.

இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும்
உரியவை யுரிய பெயர்வயி னான.

இதுவும் பெயர்ச்சொற்கெல்லாம் பொது இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று

இ - ள். இருதிணையினின்றும் பிரிந்த ஐம்பாற் சொற்கும் பெயர்வயின் உரியவை உரியவாம், எ - று.

இதனாற் சொல்லியது முன் எடுத்து ஓதப்படுகின்ற பெயர்களைப் பால் விரித்து ஓதுகின்றிலம்: பெயர்களுள் அவ்வப்பாற்குரிய பெயரைப் பாலறி கிளவியாகக் கொள்க என்றவாறு. இதனானே பெயர்ச்சொற்கு ஈறு வரையறுக்கப்படாது என்பதூஉம் கூறினாராம். 

(7)