இதுவுமது. இ - ள். ஆண்மை அடுத்த மகன் என்பது முதலாக ஓதப்பட்ட பதினைந்து பெயரும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ - று. ‘ஆண்மை அடுத்த மகன்’ என்பது ஆண்மகன். ‘பெண்மை அடுத்த மகள்’ என்பது பெண்மகள். ‘பெண்மை அடுத்த இகர இறுதி’ பெண்டாட்டி. இகர இறுதியை யுடையது இறுதி என்றாயிற்று. இவ்வுரை நம்பி. நங்கை என்பனவற்றிற்கும் ஒக்கும். ‘நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரம்’ என்பது நம்பி, நங்கை என்பன. ‘முறைமை சுட்டா மகனும் மகளும்’ என்பது முறைப் பெயரைக் குறியாது உயர்திணைப் பொருட்குப் பெயராகி மகன் மகள் என வரும். மாந்தர், மக்கள் என்னும் பெயராவன மாந்தர் மக்கள் எனப் பொருட் பன்மை உணர வருவன. ‘ஆடூஉ, மகடூஉ வாயிரு பெயரும்’ என்பது--‘ஆடூஉ, மகடூஉ என்பன. ‘சுட்டு முதலாகிய அன்னும் ஆனும் ஆவது’ சுட்டெழுத்தை முதலாகவுடைய அன் ஆன் என்னும் சொல்லீறாகி வருவன. அது சினையிற் கூறும் முதலறி கிளவியாகிய பெயர்க்குப் பெயராயிற்று. அத்தன்மையன் அத்தன்மையான், அன்னான், அனையான் என வருவன. ஏனைச் சுட்டோடும் ஒட்டிக்கொள்க. இவை உவமை குறியாது முன்னம் சில குணத்தையடுத்து அத்தன்மையான் எனப் பண்பு குறித்து வரும். ‘அவை முதலாகிய பெண்டென் கிளவி’ என்பது சுட்டெழுத்தை முதலாக உடையவாகிப் பெண்மை உணரவரும் சொல். அத்தன்மையன், அத்தன்மையாள், அன்னாள், அனையாள் என்பன. ‘ஒப்பொடு வரூஉங் கிளவி’ உவமிக்கப் படும் பொருளோடு அடுத்துவரும் பெயர். கண்ணன்னான், கண்போல்வான், பொன்னனையான். குரங்கன், குரங்கி என்பனவும் அவை. அஃதேல், அன்னார், அனையார் எனச் சுட்டு முதலாகிய பன்மை உணரவரும் பெயர் கூறாதது என்னையெனின், அவை பெரு வழக்கின அன்மையான் ஈண்டு ஓதிற்றிலராயினும், அன்ன பிறவும் என்பதனாற் கொள்க. (9)
1. ‘பெண்டன் கிளவி’ என்ற பாடமும் இருப்பதாகச் சேனாவரையர் உரையிலிருந்து தெரிகிறது.
|