1குடிப்பெயராவது குடியினானாய பெயர். அவையாவன: சேரலன் சோழன், பாண்டியன் என்பன. இன்னும் “வந்ததுகொண்டு வாராதது முடித்தல்” என்பதனால் குலத்தினானாகிய பெயருங் கொள்க. அவையாவன: அந்தணன் அந்தணி, அந்தணர் என்பன. அஃதேல் பாம்பு, நாய், மணி என்பனவும்; அந்தணர், அரசர் என வருமால் எனின் அவ்வாறு வருவன அந்நூலகத்து ஆளுதல் வேண்டி ஆசிரியன் இட்டதோர் குறி என்று கொள்ளினல்லது பாம்பைப் பிடித்தான் என்னும் பொருட்கண் அந்தணனைப் பிடித்தான் என்றவழி அப்பொருள் புலப்படாமையின், அது வழக்கன்றென மறுக்க.
குழுவின் பெயராவது பலர் கூடின கூட்டத்தாற் பெற்ற பெயர், பலர் அவையத்தார் என்பன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.
வினைப்பெயராவது உண்டவன், உண்டவள், உண்டவர் என வரும்.
உடைப் பெயராவது உடைமையாற் பெற்ற பெயர். அவை நிலமும் பொருளும் கருவியும் பற்றிவரும் குட்டுவன், பூழியன் என்பன குட்ட நாட்டையும், பூழி நாட்டையும் உடையான் என்னும் பொருள்பட வந்தன. முடியான், குழையான், குழையாள், குழையார் என்பன பொருள் பற்றி வந்தன. வேலான், வில்லி என்பன கருவி பற்றி வந்தன.
பண்புகொள் பெயராவது பண்பினாற் பெற்ற பெயர், கரியான், நெடியான், நல்லான், தீயான், நல்லாள், நல்லார் என வரும்.
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராவது தாயர், தாய்மார், தந்தையர், தந்தைமார் என்பன.
இது முதலாகிய நான்கு பெயரும் இருதிணைக்கும் பொதுவாகி வருதலின் பல்லோர்க் குறித்த என்றார். அஃதேல்; அஃறிணைக்கண்ணும்2“கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்ப்ப, இன்னே வருகுவர் தாயர்” என வந்ததாலெனின், ஆண்டு உயர்த்துச் சொல்லுதற்கண் வந்தது. அதற்கு இலக்கணம் “செய்யுண் மருங்கினும்” என்னும் புறநடைச் சூத்திரத்தாற் கொள்ளப்படும்.
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயராவது சினையினாற் பன்மை குறித்து வரும் பெயர். கூனர், குருடர். முடவர் என்பன.
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயராவது திணைபற்றிவரும் பன்மைப் பெயர். குறிஞ்சிக் கண்ணியர் குவளை பூண்டு--வெற்பராடும் வெற்புச்சே ரிருக்கை என்றவழி உயர்திணைப் பெயராகிப் பன்மைகுறித்து வந்தது. வெற்பன், மலையன், நாடன் என ஒருமை குறித்து வருவன உளவாலெனின், அவை அந்நிலத்துத் தலைமகனைக் குறிக்கில் உடைப் பெயராம். அந்நிலத்துள்ள மாந்தரைக் குறிக்கில் இருதிணைக்கும் பொதுவாம். வெட்சியார், கரந்தையார் என்பனவும் அவை. வெட்சியான், கரந்தையான் என வாராதோ எனின்; அவ்வாறு வழக்கு வரின், அத்திரளின் உள்ளான் என்னும் பொருள்பட வரினல்லது நிரைகோடல், நிரை மீட்டல், எடுத்து விடுத்தல் என்பன ஒருவனாற் செய்யப்படாமையானும், வெட்சியாள், கரந்தையாள் எனப் பெண்பால் உணரவரும் வழக்கின்மையானும் திணையாற் பெறும் பெயர் பன்மைகுறித்து வருதல் பெரும்பான்மை என்று கொள்க. சிறுபான்மை ஒருமை குறித்துவரின், அன்னபிறவாற் கொள்ளப்படும்.
கூடிவரு வழக்கி னாடியற் பெயராவது கூடியியலும் வழக்கின் வழங்கும் இயற்பெயர் என்றவாறு. இயற் பெயராவது ஒரு பொருட்கு இடு குறியாகிய பெயர். அஃது இருதிணைக்கும் உரித்தாதலின் விரவுப் பெயரென வேறெடுத்து ஓதினார். ஈண்டு அப் பெயருடையார் பலரை ஒரு வினையாற் சொல்லுங் காலத்துச் சொல் தொகுத்துக் கூற வேண்டுதலின் ஈண்டு ஓதப்பட்டது. சாத்தன் என்னும் பெயருடையார் இருவர் மூவர் சேரவந்தவழிச் சாத்தன் வந்தான் சாத்தன் வந்தான் எனத் தனித் தனி கூறின் பொருள் வேற்றுமை உணர்த்தாது. ஒரு பொருளை இருகாற் சொன்னாற் போலப்படும். ஆண்டுச் சாத்தன்மார் வந்தார், சாத்திமார் வந்தார் எனக் கூறுதல் வேண்டுதலானும், அப்பொருள் உயர்திணை ஆதலானும் ஈண்டு ஓதப்பட்டது.
இன்றிவ ரென்னும் எண்ணியற் பெயராவது இத்துணைவர் என எண்ணினான் இயன்ற பெயர். ஒருத்தி, ஒருவன், இருவர், மூவர் என்பன.
(11)
1. இப்பகுதிபற்றிய விளக்கம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துப் பதிப்பில் சிறிது வேறுபட உள்ளது அது வருமாறு:--குடிப்பெயராவது குலத்தினான் ஆகிய பெயர். அந்தணன், அந்தணி, அந்தணர் என்பன. அஃதேல் பாம்பு, நாய், மணி என்பனவும் அந்தணர்கள் என வருமால் எனின் அவ்வாறு வருவன நூலகத்து ஆளுதல் வேண்டி ஆசிரியன் இட்டதோர் குறி என்று கொள்ளினல்லது பாம்பைப் பிடித்தான் என்னும் பொருட்கண் அந்தணனைப் பிடித்தான் என்ற வழிப் பொருள் புலப்படாமையின் அது வழக்கன்றென மறுக்க. ‘வந்தது கொண்டு வாராதது முடித்தல்’ என்பதனான் குடியிற்குப் (அருகிய?) பெயராவன: சேரன், சோழன், பாண்டியன் என்பன.
2. முல்லைப்பாட்டு, 15, 16.