உயர்திணைப் பெயர்கட்குப் புறநடை

162.அன்ன பிறவும் உயர்திணை மருங்கில்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே.

உயர்திணைப் பெயர் புறநடைவகையான் உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். மேல் எடுத்து ஓதப்பட்டன போல்வன பிறவும், உயர்திணைப் பொருளிடத்து ஒருமை பன்மை எனப் பால்விளங்க வரும் எல்லாப் பெயரும் உயர்திணையிடத்த, எ - று.

எ - டு. பெண்டிர், பெண்டுகள் என்பனவும், அத்தன்மையர், அத்தன்மையார் எனவும், ஏனாதி, அமைச்சன், படைத்தலைவன் எனச் சிறப்புப் பற்றி வரும் பெயரும், நாயன், நாச்சி எனத் தலைமைபற்றி, வரும் பெயரும், அடியான், அடியாள் என இழிபுபற்றி வரும் பெயரும், ஆசிரியன், புலவன் எனக் கல்விபற்றி வரும் பெயரும், குழலன், குழலாள், இடையாள், தோளாள் என உறுப்புப்பற்றி வரும் பெயரும், ஆதிரையான், ஓணத்தான்.வேனிலான் எனக் காலம்பற்றி வரும் பெயரும், பிறன், பிறள், பிறர் நுமன், நுமள், நுமர், தமன், தமள், தமர் என்பனவும் பிறவும் உயர்திணைப் பொருட்கே உரியவாகி வரும் பெயரெல்லாம் இதுவே ஓத்தாகக் கொள்க.

(12)