அதுஇது உதுவென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய ஆய்தப் பெயரும் அவைஇவை உவையென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை என்னும் பெயரும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயரே.
நிறுத்த முறையானே அஃறிணைப் பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். அது முதலாக ஓதப்பட்ட பதினைந்து பெயரும் பாலறிய வந்த அஃறிணைப் பெயராம், எ - று.
எ - டு. அது, இது, உது; அஃது, இஃது, உஃது; அவை, இவை, உவை; அவ், இவ், உவ்; யாது, யா, யாவை என வரும்.