இதுவும் அது

164.

1பல்ல பலசில என்னும் பெயரும்
உள்ள இல்ல என்னும் பெயரும்
வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும்
இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரோடு
ஒப்பி னாகிய பெயர்நிலை உளப்பட
அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன.

இதுவும் அது.

பல்ல, பல, சில என்னும் பெயராவன பல்ல, பல, சில என்பன. 

உள்ள, இல்ல என்னும் பெயராவன உள்ள, இல்ல என்பன. 

வினைப் பெயர்க் கிளவியாவது வினையானாகும் பெயர். வந்தது, உழுதது என்பன வினையினாற் பொருட்குப் பெயராகி வந்தன. 

பண்பு கொள் பெயராவது பண்பினைக் கொண்ட பெயர். கரியது, காரி, வெள்ளை எனப் பண்பினைக் கொண்ட பொருட்குப் பெயராயின.

இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக் குறிப் பெயராவது இத்துணை என வரையறுத்து. உணர்த்தும் எண்ணுக் குறிப் பெயராம். அவை எண்ணப்படும் பொருண்மேல் வருவனவும், எண்ணுப் பெயராம்; எண்ணின் பெயரும் எண்ணும் பெயராம். நீ தந்த காணம் ஆயிரம் என்றவழி, எண்ணப்பட்ட பொருண்மேல் வந்தது. நாலிரண் டெட்டு என்றவழி எண்ணின்மேல் வந்தது.

ஒப்பினாகிய பெயர்நிலை என்பது ஒப்புப் பற்றி வருவது பொன் போல்வது, பொன்னனையது, யானைப்போலி என்பன.

அப்பால் ஒன்பதும் அவற்றோரன்ன என்பது அக்கூற்று ஒன்பது பெயரும் அஃறிணைப் பாலறி சொல்லாம் என்றவாறு.

(14)


1. இதன் பொருள் காணப்பட்டிலது.