அஃறிணைப் பெயர்கட்குப் புறநடை

166.அன்ன பிறவும் அஃறிணை மருங்கில்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே.

அஃறிணைப் பெயர்க்கெல்லாம் புறநடை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். மேற்சொல்லப்பட்டன போல்வன பிறவுமாகி அஃறிணைப் பொருட்கண் பன்மையும் ஒருமையுமாகிப் பால் விளங்க வந்த எல்லாப் பெயரும் அஃறிணை யிடத்த, எ - று.

எ - டு. உள்ளது, இல்லது, பிறிது, பிற, அத்தன்மையது, அத்தன்மைய. இவையும் இவை போல்வனவும்.

(16)