மேற் பால் விளங்குவன கூறினார். இனிப் பால் விளங்காத
அஃறிணை இயற்பெயர் பாலுணர்த்துமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். அஃறிணைப் பொருண்மேல் வரும் இயற் பெயர் ஒருமையும், பன்மையும் தெரிநிலை யுடையவாம் வினையொடுவரின், எ - று. அல்லது பால் விளங்கா என்றவாறு.
உயர்திணைப் பொருண்மேல் விரவி வரும் இயற் பெயர் ஒருமையும் பன்மையும் தோன்ற
நிற்றலின் வேறோதப்பட்டது. இவை பொருளும், உறுப்பும், பண்பும், தொழிலும், இடமும்,
காலமும் பற்றி வரும்.
எ - டு. ஆ, தெங்கு என்பன பொருள். இலை, பூ, என்பன உறுப்பு. கருமை, வட்டம் என்பன பண்பு. உண்டல், ஓடல் என்பன தொழில். அகம், புறம் என்பன இடம். யாண்டு, திங்கள் என்பன காலம். ஆ வந்தது என்றவழி ஒன்று என்பதூஉம், வந்தன என்றவழிப் பல என்பதூஉம் உணர்த்தியவாறும், இவ்விரு ஈற்றுக்கும் பொதுவாகி நின்றவாறும் கண்டு கொள்க. பிறவும் அன்ன.
(17)