நிறுத்த முறையானே இருதிணைக்கும் உரிய பெயர்
இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். உயர்திணைப் பெயர்ச் சொல், அஃறிணைப் பெயர்ச் சொல் என இருதிணைச் சொற்கும் ஒத்த உரிமையினின்றும் திரிந்து பொருள் வேறுபடூஉம் எல்லாப் பெயரும் ஆராயுங் காலத்துத் தத்தமக் கேற்ற வினையோடே கூடி யல்லது பால் விளங்குதல் இல,
எ - று.
எ - டு. பால் எனவே திணையும் அடங்கும். அவையாவன இயற் பெயர் முதலாக முன் எடுத்து ஓதுகின்ற பெயர். அவற்றுள், சாத்தன் என்னும் பெயர் உயர்திணை ஆண்பாற்கும் அஃறிணை ஆண்பாற்கும் இடுகுறியாகி வழங்கு மாதலின், அது வந்தான் என்பதனோடு தொடர்பு பட்டுழி உயர்திணை எனவும், வந்தது என்பதனோடு தொடர்பு பட்டுழி அஃறிணை எனவும் நின்றவாறு கண்டு கொள்க. பிறவுமன்ன. இச் சூத்திரம் எதிரது நோக்கிற்று.
(18)