மேலதற்கு ஓர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். தத்தம் மரபினாற் பால் உணர வரூஉம் வினைச் சொல்லானன்றி நிகழ்காலத்தை உணர நின்ற பலரை வரைந்த செய்யும் என்னும் முற்றுச் சொல்லானும் உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்து: அப்பால் தெரிய வரும் தொழிலின் கண் எ - று. நிகழூஉ நின்ற என்பதனைப் பெயரெச்சமாகவும், பலர் வரை கிளவி என்பதனை வினைத்தொகை யாகவுங் கொள்க. உம்மை எச்சவும்மை யாகலான், அஃறிணை யொருமை தோன்றலும் உரித்தென்று கொள்க. எ - டு. சாத்தன் யாழெழூஉம், சாத்தி சாந்தரைக்கும் என்றவழி உயர்திணை என்பது பெறப்பட்டது. சாத்தன் புல்மேயும், சாத்தி புல் மேயும் என்றவழி அஃறிணை என்பது பெறப்பட்டது. (19)
1. பால்வரை கிளவி எனப் பாடங் கொள்வர் இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும்.
|