செப்பில் உறழ் பொருட்கண் வரும் வழுவமைதி

17.

தகுதியும் வழக்கும் தழீஇயின வொழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை யிலவே.

மேற்சொல்லப்பட்ட உறழ்பொருட்கண் வரும் வழுவமைத்தல்
நுதலிற்று.

(இ - ள்.) சினை முதலாகிய பொருள்களை அவ்வப்பொருளோடு உறழ்தலே யன்றித் தகுதியையும் வழக்கினையுந் தழுவினவாய் நடக்கும் ஒரு கூற்றுச்சொல் விலக்கும் நிலைமையில, எ-று.

சினைமுதற்கிளவியும், உறழ்பொருளும் அதிகாரத்தான் வந்தன.

தகுதியாவது இதற்கிது தகுமோவெனப் பண்பினானாதல் தொழிலினாதல் உறழநிற்பது, வழக்காவது ஒப்புமையின்றி உலகத்தார் பயில வழங்கப்படுவது.

அவற்றுள் தகுதிபற்றி வந்த வினா:-- இந்நங்கை கண் நல்லவோ இக்கயல் நல்லவோ என வருவது: இது பண்பு. இம்முகிலோ இவன் கையோ கொடுக்க வல்லது: இது தொழில்.

செப்பு வருமாறு:--கயலிற் கண் நல்ல என்றானும், ஒக்கும் என்றானும் உரைப்பது.

இனி, வழக்குப்பற்றி வினா வருமாறு:--கரிதோ வெளிதோ: இருப்பேனோ போவேனோ: ஊரோ காடோ: பகலோ இரவோ: எனவும், தேவராய் வாழ்தல் நன்றோ, நரகத்துள் உறைதல் நன்றோ எனவும், பிறவும் இவ்வாறு ஒன்றினொன்று பொருத்தமின்றி உலகவழக்கின்கண் வருவன கொள்க.

செப்பு வருமாறு:--கரிதன்று வெளிதென்றானும், வெளிதன்று கரிதென்றானும் இவ்வாறே பிறவாற்றானும் உரைப்பன.

இவை மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தின் வழுவுதலின் அமைதியாயிற்று.

(17)