மேற்சொல்லப்பட்ட இருதிணைக்கு முரிய சொல்
பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். இயற் பெயர் முதலாக எடுத்து ஓதப்பட்டனவும் எடுத்து ஓதப்படாத அத்தன்மைய பிறவும் இருதிணைப் பொருண்மையும் உணரத் தோன்றின், அவ்விருதிணையோடுங் கொள்க, எ - று. ஒரு திணைமேற் கொள்ளற்க என்றவாறாயிற்று.
இயற் பெயராவது ஒரு பொருட்கு இடுகுறியாகி வழங்கும் பெயர். மேற் சினைப் பெயர் கூறுகின்றா ராதலின் இதனை முதற் பெயர் என்று. கொள்க.
சினைப் பெயராவது உறுப்பின் பெயர்.
சினைமுதற் பெயராவது சினையையும் முதலையும் உணர்த்தும் பெயர்.
முறைப் பெயராவது பிறப்பு முறை பற்றி வரும் பெயர்.
தாம், எல்லாம், நீர் என்பன பன்மை உணர்த்தும் பெயர்.
தான், நீ என்பன ஒருமை யுணர்த்தும் பெயர்.
அன்ன பிறவும் ஆவன பிராயம் பற்றி வரும் பெயரும், இடம் பற்றி வரும் பெயரும், தொழில் பற்றி வரும் பெயரும் பிறவும்.
(20)
1. நீயிர் என்பது பிறவுரையாசிரியர்கள் கொண்ட பாடம்.