பெண்மைப் பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பெண்மை குறித்த எல்லாப் பெயரும், அஃறிணைப் பெண்பாலாகிய ஒன்றற்கும், உயர்திணைப் பெண்பாற்கும் ஒத்த நிலைமைய, எ - று. மேல், நினையுங் காலைத் தத்தம் மரபின்--வினையோ டல்லது பால்தெரி பிலவே (18) என்றமையான், இவையும் உயர்திணை வினை கொண்டவழி உயர்திணை எனவும், அஃறிணை வினை கொண்டவழி அஃறிணை எனவும் கொள்க. இவ்வுரை வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும். எ - டு. சாத்தி வந்தது, முலை எழுந்தது, முடத்தி வந்தது, தாய் வந்தது என்றவழி அஃறிணைப் பொருண்மை உணர்த்தின. சாத்தி வந்தாள், முலை யெழுந்தாள், முடத்தி வந்தாள். தாய் வந்தாள் என்றவழி உயர்திணைப் பொருள் உணர்த்தின. அஃதேல், முலை எழுந்தது எனத் தன்வினையான் வரின் அஃறிணைப் பொருளேயாம் பிற எனின், முலை என்பது இரு திணைப் பொருட்கும் உள்ளதோர் உறுப்பாகலின், ஆண்டுத் திணை தெரியாமற் பொதுப்பட நிற்கும், அது முதல் வினையோடு முடியினல்லது திணை விளங்காது என்க. (26)
|