ஆண்மை சுட்டிய பெயர்

177.ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே.

ஆண்மைப் பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஆண்மை குறித்த பெயரெல்லாம் அஃறிணை ஆண் பாலாகிய ஒன்றற்கும், உயர்திணை ஆண்பாலிற்கும் ஒத்த நிலைமைய, எ - று.

எ - டு. சாத்தன் வந்தான், மோவாய் எழுந்தான், முடவன் வந்தான், தந்தை வந்தான் என்றவழி உயர்திணை ஆயின. சாத்தன் வந்தது, முடவன் வந்தது, தந்தை வந்தது எனவும்; குன்றியன்ன கண்ண குரூஉமயிர் பின்றாள் வெள்ளெலி மோவா யேற்றை எனவும்; முடங்குபுற விறவின் மோவா யேற்றை எனவும் அஃறிணைப் பொருண்மை உணர்த்தின.

(27)