எல்லாம் என்னும் விரவுப் பெயர்

182.

1எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே
தன்னு ளுறுத்த பன்மைக் கல்லது
உயர்திணை மருங்கின் ஆக்க மில்லை.

எல்லாம் என்னும் சொல் திணை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். எல்லாம் என்னும் பெயர் இருதிணைக்கண்ணும் பன்மை குறித்த நிலைமைத்து. அஃது உயர்திணைக்கண் உளப்பாட்டுத் தன்மைக்கண் அல்லது, முன்னிலை, படர்க்கையின் ஆகுதலில்லை, எ - று.

எ - டு. எல்லாம் வந்தன, எல்லாம் வந்தீர் என்றவழி அஃறிணைப் படர்க்கையினும், முன்னிலையினும் வந்தது. எல்லாம் வந்தேம் என்ற வழி, உயர்திணை ஆயிற்று.

அஃதேல் நெறிதாழ் இருங்கூந்தல் நின்பெண்டிர் எல்லாம் என உயர்திணைப் படர்க்கையினும், நீயிர்எல்லாம் விளையாடப் போதுமின் என முன்னிலையிலும் வருமால் எனின், அவை இலக்கண வழக்கல்ல.

நின்பெண்டிர் எல்லாரும் என்னும் சொல் எல்லாம் எனவும், நீங்கள் எல்லீரும் என்பது எல்லாம் எனவும் மரூஉ வழக்காகி வந்தன. மரூஉ வழக்கு நீக்கப்படாது என்பது எழுத்ததிகாரத்து மொழிப்புணர்ச்சி கூறுகின்றுழி, மரூஉமுடிபென எடுத்தோதினமையாற் கொள்ளப்படும். இலக்கண வழக்காயின் வரும் குற்றம் என்னை யெனின், ஈண்டு விலக்கினமையானும், உயர்திணைக்கண் எல்லாரும், எல்லீரும் என எடுத்தோதி ஆண்டுத் தன்மைப் பெயர் ஓதாமையானும், எழுத்ததிகாரத்துள் எல்லாம் என்னும் பெயர்க்கு வற்றுச் சாரியை விதித்து உயர்திணையாயின் நம்மிடை வரும் (எழு 190) என ஆண்டும் உளப்பாட்டுத் தன்மைக்கேற்ற சாரியை வரும் என விதித்தமையானும், இப்பெயர் உயர்திணைக்கண் உளப்பாட்டுத் தன்மைக்கே உரித்து என்பது இவ்வாசிரியர் கருத்தென்று கொள்க இதனைச் செய்யுள் மருங்கினும் என்னும் அதிகாரப் புறநடையாற் பிறநூல் முடிபு எனத் தழீஇக் கோடலுமாம்.

(32)


1. இதனை இரு சூத்திரமாகக் கொள்வர் ஏனை யுரை யாசிரியர்கள்.