நீயிர், நீ, ஒருவர் என்பவற்றின் பால் தெரியுமாறு

187.

இன்ன பெயரே இவையெனல் வேண்டின்
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்

பெயரானும் வினையானும் பால் அறியப் படாத சொற்கள்
பால் விளங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். நீயிர், நீ, ஒருவர் என்று சொல்லப்பட்ட பெயர்கள் இன்னபாற்குரிய என்று அறியவேண்டின் சொல்லுவான் குறிப்பினோடு சேர்த்தி அவற்றின் பின்வரும் சொல்லால் உணர்க, எ - று.

‘முன்னம் சேர்த்தி முறையின் உணர்க’ என்றமையால், குறிப்பினாலும், முறையினாலும் உணர்க என்றவாறாகக் கொள்க.

எ - டு. 1நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலர் என்றவழி, நீ என்பது பெண்பால் உணர நின்றது. 2நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை என்றவழி, ஆண்பால் உணரப்பட்டது. 3எம்போல் இன்றுணைப் பிரிந்தாரை உடையையோ நீ என்றவழி, அஃறிணை என்பது உணரப்பட்டது. இவை குறிப்பினான் உணர நின்றன. நீ அரசன், நீ குயத்தி, நீ கடல், என்பன முறைவந்த சொல்லினால், பால் விளங்கின. நீயிர் என்பதற்கும் இவ்வாறே உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுதல் அல்லால் என்றவழி, ஆண்பால் உணர நின்றது. வண்டு சுழல வருவா ரொருவரைக்-கண்டு கலங்கிற் றுயிர் என்பது பெண்பால் உணர நின்றது. இவை குறிப்பினான் உணர நின்றன. ஆயிழையார் ஒருவர், அயில் வேலார் ஒருவர் என்பவை சார்ந்த சொல்லாற் பாலுணரப்பட்டன. பிறவுமன்ன.

(37)


1. கலி. 56.

2. புறம் 57.

3. நெய்தற்கலி - 12.