காலத்தின் பெயர்

194.இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமும் குறிப்பொடுங் கொள்ளும்
மெய்ந்நிலை உடைய தோன்ற லாறே.

காலத்திற்கு வகையும் அதற்கு உரியதோர் இலக்கணமும்
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட காலத்தின் பாகுபாடாகிய இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என அம்முக்காலமும் குறிப்பொடும் கொள்ளும் பொருள் நிலைமையை உடைய தோன்று நெறிக்கண், எ - று.

உம்மை எச்சவும்மை. எனவே, காலந்தோற்ற நில்லாது குறித்துக் கொள்ளப்படும் வினைச்சொல்லும் உள என்றவாறாம்.

எ - டு. உடையன் என்பது முன்பு உடையன், இப்போது உடையன், பின்பு உடையன் என மூன்று காலத்திற்கும் வடிவு வேற்றுமைப்பட நில்லாமையின், காலம் குறித்துக் கொள்ளப்பட்டது.

(3)