உயர்திணைத் தன்மை ஒருமை வினைமுற்று

197.கடதற என்னும்
அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோ(டு)
என் ஏன் அல் என வரூஉம் ஏழும்
தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.

தனித் தன்மை வினை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். க, ட, த, ற என்னும் அந் நான்கு எழுத்தினையும் ஊர்ந்த குற்றியலுகரத்தோடேகூட என் ஏன் அல் என வரூஉம் ஏழு ஈறும் தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லாம், எ - று.

தன்வினை உரைக்கும் சொல் என்னாது தன்மைச் சொல் என்றது தன்வினையைத் தானே உரைக்கும் சொல் என்று கொள்க.

எ - டு. உண்கு, உண்டு, வந்து, சென்று எனவும்; உண்டனென், உண்ணாநின்றனென், உண்குவென்; உண்டேன், உண்கின்றேன், உண்பேன்; உண்பல் எனவும்; உண்ணலென், உண்ணேன் எனவும் வரும்.

(6)