மேற் சொல்லப்பட்டவற்றுள் செய்கு என்பதற்கு ஓர் வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் செய்கு என்னும் சொல் வினையோடு முடிந்துழியும், பாலுணர்த்தும் இயற்கையில் திரியாது, எ - று.
எ - டு. காண்கு வந்தேன் எனவரும். காண்கு யான் எனப் பெயரோடும் முடிதல் இலக்கணம் என்று கொள்க.
அஃதேல், முற்றுச் சொல் பெயர் கொண்டு முடிதல் யாண்டுப் பெற்றாம் எனின், முன் முற்றுச் சொல்லிலக்கணம் கூறுகின்றுழி, அவைதாம், “தத்தம் கிளவி யடுக்குந வரினும்-எத்திறத் தானும் பெயர்முடி பினவே” (சூ. 244) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். ஈண்டு முடியினும் என்றதற்குப் பொருள் தொடர்புபடினும் என்றவாறாகக் கொள்க.
(7)