நிறுத்தமுறையானே உயர்திணைச்சொற் பாகுபடுமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்.ஆடூஉ வறிசொல் லென்பது ஆண்மகனை யறியுஞ் சொல், எ - று. அறிவார்க்குக் கருவியாகிய சொல் அறி சொல்லாயிற்று. மகடூஉ வறிசொல்லென்பது பெண்டாட்டியை அறியுஞ் சொல், எ - று. பல்லோரறியுஞ் சொல்லொடு சிவணி என்பது பலரை யறியுஞ் சொல்லொடு கூடி, எ - று. அம்முப்பாற் சொல் உயர்திணையவ்வே என்பது அம்மூன்று கூற்றுச்சொல் உயர்திணையிடத்த, எ - று.
உயர்திணைப் பொருள்பற்றி வரும் பெயர்ச்செல்லும் வினைச்சொல்லும் மூன்று பகுதிய என்றவாறாயிற்று. எற்றுக்கு? ஆண், பெண், அலி; ஆண்பன்மை, பெண்பன்மை, அலிப்பன்மை. இவரெல்லாரும் தொக்க பன்மையெனப் பலவகைப்படுமாலெனின், பொருள் நோக்கிக் கூறினாரல்லர்; சொல்முடிபு மூவகையென்று கூறினாரென்க. என்னை? அலிப்பன்மை மகடூஉவறிசொல்லானும் கூறப்படுமாதலானும், ஆண்பன்மையும் (பெண்பன்மையும்) எல்லாரும் தொக்க பன்மையும் வந்தாரெனவே முடிதலானும், மூவகையாகி யடங்கிற்றென்க. பல்லோரறியுஞ் சொல்லென்னாது சிவணியென்றதனாற் பெற்ற தென்னையெனின், ஒன்று, இரண்டு, பலவென வடமொழிப் புலவர் கூறியவாறுபோலப் பாகுபடும் வழக்கின்மையின் ஒன்று, பலவெனத் தமிழ்நடை இரண்டுபாலாம். அவற்றுள் உயர்திணை ஒருமை, யாடூஉ வறிசொல், மகடூஉ வறிசொல்லென விருமுடிபுடைத்தாகலின், அச் சொற்கள் பலரறி சொல்லொடு கூடி மூன்று பாலாயின, அல்லது பாலுள்ளன இரண்டென்பது அறிவித்தற்கெனக் கொள்க. சிவணி என்பது வினையெச்சமன்று; ஒடுவின் பொருண்மை தோன்ற வந்தது, தாயொடுகூடி மூவர் என்றாற் போல. அம்முப்பாற் சொல்லும் என உம்மை கொடாதது என்னையெனின், பால் ஐந்துளவாதலிற் கொடாமையும் அமையும் என்க.
(2)