தன்மைப் பன்மையில் வரும் திரிபு

203.அவற்றுள்,
பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி
எண்ணியல் மருங்கில் திரிபவை உளவே.

உளப்பாட்டுத் தன்மைக்கண் வருவதோர் திரிபு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், உளப்பாட்டுப் பன்மைச் சொல் எண் இயலும்வழித் திரிபவை உண்டு, எ - று.

எ - டு. எண் என்பது இரண்டு மூன்று என்பன. யாம் இருவேம் எனற்பாலது, யாம் இருவர் எனவும் வரும். இன்னும் எண்ணியன் மருங்கின் என்பதற்கு, எண்ணப்பட்டியன்ற மருங்கின் எனப் பொருள் உரைக்க உளப்பாட்டுத் தன்மைக்கு ஓதிய எட்டீற்றினும், திரிபவை உள என்றுமாம். வருவோம், உண்போம் என ஓகாரம் பெற்றுவருவன ஏகாரத் திரிபு என்று கொள்க.

(12)