உயர்திணை வினைக்குறிப்பு ஆமாறு உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள். ஆறாம் வேற்றுமைக்கண் ஓதிய உடைமை என்னும் பொருண்மையானும், ஏழாம் வேற்றுமைக்கண் ஓதிய நிலப் பொருண்மையானும், ஒன்றோடொன்று உவமையாகி வரும் பொருண்மையானும், ஒன்றன் குணமாகிய பண்பினானும் மேற்பகுக்கப்பட்ட காலம் குறிப்பொடு தோன்றும், எ - று.
என்று என்பது எண்ணுக் குறித்து நின்றது. இதனாற் சொல்லியது இப்பொருண்மை காரணமாக வினைக்குறிப்புத் தோன்றும் என்றவாறு.
உடைமையாவது உடையானும், உடைப்பொருளும் தோன்றவரும். சாத்தனதுடைமை குழை என்பது. இதனுள் உடைப்பொருளை முந்துறக் கிளக்குங்கால், குழையை உடையன் சாத்தன் என வரும். ஆண்டு உடையன் என்பது பெயருமின்றி வினையுமின்றி நின்றதாயினும், உருபேலாது வினைச்சொற்போல நிற்றலின் வினைக்குறிப்பெனக் குறிபெற்றது.
நிலத்தினான் வந்தது:--சாத்தன் மாடத்துக்கண்ணிருந்தான் என்னுழி பொருட்கண் சாத்தன் மாடத்தன் என வருவது. மாடத்தன் என்றவழி இடமும், உருபும், வினையும் ஒற்றுமைப்பட்டுச் சாத்தன் என்பதற்கும் பயனிலையாகி வினைச்சொல் நீர்மைப்பட்டு வருதலின், அதுவும் வினைக் குறிப்பாயிற்று.
ஒப்பு என்பது--இதனை ஒக்கும் இது என்புழி, ஒத்தல் பெயருமன்றி வினையுமன்றி நின்றதாயினும், தந்தையை ஒப்பன் என வினைச்சொற் போல நிற்றலின், அதுவும் வினைக்குறிப்பாயிற்று.
பண்பாவது--இவற்கு நிறம் கரிது என்புழி, கருமை என்பது அப்பொருட்குப் பண்பாதலின், அப்பண்பினை உடையானைக் கரியன் என்ப ஆகலான், அது பெயருமன்றி வினையுமன்றி வரினும் வினைச்சொற்போல நிற்றலின், அதுவும் வினைக்குறிப்பாயிற்று. இவை எல்லாம் அவ்வப் பொருள் காரணமாக வந்த சொல்லாயினவாறு கண்டுகொள்க.
இவற்றுள், காலம் குறிப்பொடு தோன்றலாவது--இவன் திருவுடையன் என்றவழிச் சொல்வான் குறிப்புத் தொன்று தொட்டுத் திருவுடையன் என்பதாயின், இறந்தகாலம் காட்டும்; இப்பொழுது என்பதாயின், நிகழ்காலம் காட்டும்; இனி என்பதாயின் எதிர்காலம் காட்டும். பிறவும் இவ்வாறு அறிந்துகொள்க.
(16)
1. இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.