இதுவும் அது. இ - ள். இப்பொருள் அல்ல என்னும் பொருண்மையானும், இப்பொருள் இல்லை என்னும் பொருண்மையானும், இப்பொருள் உண்டு என்னும் பொருண்மையானும், இது செய்யவல்லன் என்னும் பொருண்மையானும் வரும் சொல்லும், அத்தன்மைய பிறவுமாகி வரும் சொல்லும், குறிப்பாற் கொள்ளப்படும் எல்லாச் சொல்லும் காலம் குறிப்பான் உணரப்படும், எ - று. இதனாற் சொல்லியது இவை காரணமாகப் பிறந்த சொல்லும் குறிப்பு வினையாம், எ - று. எ - டு. அல்லன், இலன், உளன், வல்லன் எனவரும். அன்ன பிறவாற் கொள்ளப்படுவன இதன் எதிர்மறை வாய்பாட்டான் வரும். ஆவன், வல்லான் எனக்கொள்க. பிறவும் அன்ன. “குறிப்பொடு கொள்ளு மென்ன கிளவியும்” என்று ஓதியவதனாற் காலங் குறித்தலே யன்றி, ஈண்டு ஓதப்பட்ட பொருண்மை புலப்பட நில்லாது குறித்துக் கொள்ள நிற்கும் சொல்லும் வினைக் குறிப்பாம் என்றவாறு. சாத்தன் குழையை உடையன் எனக் கூறற்பாலது சாத்தன் குழையன் என்ற வழிக், குழையாகிய பொருளும், உருபும், உடைமை என்னும் சொல்லும் ஒற்றுமைப்பட்டுக் குழையன் என ஒரு சொல்லாகி வருதலின், அதுவும் வினைக்குறிப்பாம் என்று கொள்க. 1குழலன் கோட்டன் என்பனவும் அவை. அஃதேல், இவை வேற்றுமைத்தொகை யாகாவோ எனின், அது உருபு தொக வருதலும், பொருள் தொக வருதலும் என இருவகைத்து. அவற்றுள் உருபு தொகவரின் குழை உடையன் எனல் வேண்டும். பொருள் தொகவரின் குழைச்சாத்தன் எனல்வேண்டும். அவ்விருவாற்றானும் அன்றிக், குழையன் என வினைச்சொல் நீர்மைப்பட்டு வருதலின், வினைக் குறிப்பாயிற்று. இன்னும் ‘குறிப்பொடு கொள்ளு மென்ன கிளவியும்’ என்றதனாற் பைங்கண்ணன், புன்மயிரன் எனப் பண்பினாகிய சினைமுதற் கிளவியாகி இருதிணைக்கும் பொதுவாகி வரும் வினைக்குறிப்பும் கொள்ளப்படும். (17)
1. முருகா. 209.
|