உயர்திணைக் குறிப்பு வினைமுற்றின் ஈறு

209.பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி உயர்திணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே.

குறிப்பு வினைச்சொற்கு ஈறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பன்மையும் ஒருமையும் ஆகிப் பால் விளங்க வந்தனவாகிய மேற்சொல்லப்பட்ட மரபினவாகிக் குறிப்பொடு வரூஉங்காலத்தை யுடைய சொல் உயர்திணைமருங்கின் மேற் சொல்லப்பட்ட சொல்லொடு வேறுபாடில, எ - று.

இவ்வாறு மாட்டெறிந்ததனான் ஆண்டு ஓதிய ஈறே வினைக்குறிப்பிற்கும் ஈறு என்றவாறாம். ஏற்புழிக் கோடல் என்பதனான் ஈண்டு ஏற்பன கொள்ளப்படும்.

எ - டு. உடையம், உடையாம், உடையெம், உடையேம் இவை உளப்பாட்டுத் தன்மை. உடையன், உடையேன் இவை தனித்தன்மை. உடையன், உடையான், உடையள், உடையாள், உடையர், உடையார், உடையோன், உடையோள், உடையோர் இவை படர்க்கை. ஏனையவற்றோடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. பிறவற்றினும் ஏற்பன வந்தவழிக் கண்டுகொள்க.

(18)